நளினியின் போர்க்காலக்கவிதைகள்
அகதிகள்
நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்
ஊர்விட்டு ஊர் வந்தோம்
ஊமையாய் அழுகின்றோம்
ஊனங்கள் நமக்கில்லை
ஊரைத்தான் நினைக்கின்றோம்
விமானங்கள்
ஊனமுது கொள்வதில்லை
ஊரவரை நினைத்துவிட்டால்
சயனிக்க மனமில்லை
சஞ்சலமே நிறைந்ததனால்
எண்ணற்ற ரகங்களிலே
எண்ணி விடமுடியாமல்
வானத்தில் வட்டமிடும்
வஞ்சகரின் விமானங்கள்
பறந்துசெல்லும் புக்காரா
பாராமல் குண்டு போடும்
பங்கருக்குள் இருந்தென்ன
பதம் பார்த்தே தீர்த்துவிடும்
உயிர்
சூல் கொண்ட மேகங்கள்
சூழ்ந்தங்கே வந்ததினால்
சுடர் தந்த சூரியனும்
சுடரொளியை மறைத்துவிட்டான்
குளிர்காலம் வந்ததினால்
குளிர்தாங்க முடியாமல்
ஊர் விட்டு ஊர் செல்லும்
உயிர்காக்கப் பறைவையினம்
போர்க்காலம் வந்ததினால்
பயம் தாங்க முடியாமல்
ஊர்விட்டு ஊர் செல்லும்
உயிர் காக்க மனித இனம்
காலனே காத்திரு
காலமது வந்து விட்டால்
காலனவன் உயிர் பறிப்பான்
பெரியவர்கள் சொன்னார்கள்
படித்தறிந்த உண்மைகளாய்
எம் மண்ணில் உள்ளவர்கள்
எப்படித்தான் பிறந்தனரோ
அனைவரின் வாழ்க்கையுமே
அரைகுறையில் போகிறதே
பாவங்கள் செய்தவரை
பாவியாய் படைத்திடுவர்
எவ்வகையில் அடங்கிடுவர்
எம்நாட்டுத் தமிழ் மக்கள்
அனுபவிக்கும் வயதினரும்
அனுபவித்த வயதினரும்
பால் குடிக்கும் குழந்தைகளும்
பால் கொடுக்கும் தாய்மாரும்
பள்ளி செல்லும் பாலகரும்
படித்தறிந்த மேதையரும்
என்ன பிழை செய்தார்கள்
ஏனிந்த நிலையின்று
தமிழராய் பிறந்ததினால்
தானிந்த நிலபரமோ
காலனே விரையாதே
காத்திருந்து உயிரெடு
ஏனிந்த அவசரம்
எம்மினத்தை வாழவிடு
அன்னையின் மடல்
நீண்ட நாட்களின்பின்
நீண்டதோர் மடலதனை
அன்னையவள் வடித்திருந்தாள்
அன்பான வார்த்தைகளில்
பெற்றவளின் கடிதம் கண்டு
பேரானந்தம் கொள்ளவில்லை
தாயவளின் வரிகள் கண்டு
தளர்ந்து தான் போய் விட்டேன்
கடவுளவன் கருணைதனை
நாம் செய்யும் உதவியென்றாள்
நன்றிகள் பல சொன்னாள்
டொலர்கள் பல பெற்றதற்காய்
பல தடவை கேட்டிருந்தாள்
பெற்றவள் எம் சுகங்களை
பக்குவம் பல சொல்லி
பாங்காய் எழுதியுள்ளாள்
கடன் காரியானதாய்
கதிகலங்கிப் போயிருந்தாள்
எங்கள் நிம்மதியைக் குலைப்பதாய்
எழுத்திலே வடித்திருந்தாள்
எத்தனை பிறவிகள் தேவையம்மா
உன் கடன் தீர்க்க
கடன் காரி நானம்மா
கதறியழத் துடிக்கின்றேன்
அம்மா நீ எங்கே
உலகிலே சிறந்தது
உயிரினும் மேலாலனது
உன் பாசம்;
உன் நேசம்;
உன் அன்பு;
உன் அரவணைப்பு
எல்லாமே தேவையே எனக்கின்று
அம்மா நீ இன்று
எவ்வூரில் ஓடுகின்றாய்?
கோரப்புயல் போல
கொடுமைகள் புரிந்துநிற்கும்
கொடியவர் துரத்தினரா?
கொண்டதே கோலமாக
கொடுந்துயர் கொண்டு நீயும்
கலங்கியே ஓடினாயோ?
கணவனே துணை என்றாய்
கடல் கடந்து வந்து விட்டேன்
கண்காணா ஊரிலின்று
கண்கலங்கி நிற்கின்றேன்
அம்மா உனை என்று காண்பேன்
உன் கையால் சோறு உண்ண ஆசை
என் பிள்ளையை நீ அள்ளி
அணைத்து மகிழ்வதைக்காண ஆசை
ஆயிரம்பேர் இருந்தென்ன
ஆயிரமாய் பணம் வந்தென்ன
ஆளாக்கி வளர்த்த உன்
அன்பு மனம் தவிக்கின்றதே
தத்தித் தத்தி நடக்கையிலே
தள்ளாடி விழுமென்னை
தாவியே ஓடிவந்து
தாங்கியே நீ பிடித்தாய்
தளர் நடை போட்டு நீ
தள்ளாடி நடக்கையிலே
தள்ளியே நானிருந்து
தவிக்கின்ற தவிப்புக்களை
என்னென்று உரைத்திடுவேன்
உனைப் பிரிந்த பின்தானே
உனை எண்ணிப்பார்க்கின்றேன்
தாயான பின்தானே
தாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்
என்செய்வேன் ஏதுசெய்வேன்
என்றேங்கி வாடுகின்றேன்
அம்மா நீ எங்கே?


