நண்பர்கள் சிலரின் கவிதைகள்..

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்
தினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்

இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்
ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை
அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்
அரக்கர் கூட்டம்

கைக்கெட்டும் தூரத்தில்
எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு

கேட்காமல் கேட்கும்
எம் உறவுகளின் ஓலங்கள்

இவன் வாழும் நாடோ காந்தியின்
அகிம்சை வழி

நேருவின் சமாதனப்புறா-அதுவோ
முதுகில் அடித்தவனை
முழுவதும் தொழும்

தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?

கூட்டுப் பயிற்சியும்
கொஞ்சிக்குலாவலும்
நம் குல நாசம்
செய்வதற்கேயன்றி வேறெதற்கு?

ரகசியப் பேச்சுக்களும்
ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற
ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்
நலிவடைந்த உறவுகளை
நசுக்கத்தானே?

சமாதானம் என்று சொல்லி
சவ வண்டியனுப்பும்
சறுக்கிய தேசத்தின்
ஆற்றாமைத் தமிழன்
அழுகிறான் இங்கே
அவனுக்கு நாடிதுவே
வேறில்லை அவனியிலே

கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்
கயவர்கள் கூட்டம்
கட்சிக்கொடி ஏந்திக்
கல்லாக்கட்டும்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழன்
ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்
உடுக்கை மானம் உண்டோ அறியேன்…

அத்திவெட்டி ஜோதிபாரதி
jothibharathi@yahoo.com

000

தனிமை
பறக்கின்றபோது
சேர்ந்து பறந்தாலும்
இருக்கின்றது என்னவோ
தனிமையின் கூட்டில்தான்.

பூப்பறிக்க கூடவந்தவர்கள்
முள்ளெரிக்க
முகம் சுழிக்கின்றார்கள்
காத்திருப்பது
உனக்காக என்றால்
கனவுகளாவது
மிச்சமிருக்கும்.
எதற்காக
விழித்திருக்கின்றேன்
தெரியவில்லை
இமைகள் இல்லாத
விழிகள்
தூக்கமில்லாத
தூக்குத்தண்டனை
சூரியதேவதை
இருட்டு அரக்கனிடம்
என் விடியல்களைப்
பணயம் வைத்து
தன் வெளிச்சத்தை
மீட்டுக்கொண்டாள்.

புதியமாதவி

000

உண்மை வாழ்க்கைப் பாட(பய)ங்கள்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!! அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!

அன்பைக் கண்டு
பயந்தேன்!! அது என்
இதயத்தில் இருள்
போன்ற கருமையை
நீக்கி, நிகரில்லா
வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு
பயந்தேன்!! அது
அறியாமை என்று
அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு
பயந்தேன்! நான் தனியாக
இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு
பயந்தேன்!! தோல்வியே
வெற்றிக்கு அறிகுறி என்று
உணரும் வரை!!

வெற்றிகளை கண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின் சந்தோஷம்
என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்

என்னைப் பற்றிய கருத்துக்கள்
இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்கு தேவை
என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
உண்மைகளைப் பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!

நடந்ததை நினைத்து
பயந்தேன்!! அது இனி
நடக்காது என்று

நம்பும் வரை!!
நடக்கப் போவதை
நினைத்து பயந்தேன்!!
நடந்தது எல்லாம்
நன்றாகவே நடந்தது,
நடக்கப் போவதெல்லாம்
நன்றாகவே நடக்கும்
என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு
பயந்தேன்!! அது முடிவல்ல
முடிவின் தொடக்கமே
என்று உணரும் வரை!!!

அன்புடன் பாலா

000

எனக்கு வேண்டும் வரம்
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – யாவும்
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – உள்ளம்
வேண்டும் போதே வேண்டுமடா

எல்லைக் கோடுகள்
அழிந்திடணும் – அதையென்
சின்னக் காலால்
அழித்திடணும் – உலகை
ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும்
பறவைகளாய் – மனிதன்
காலடி உலவும்
நிலைவேண்டும் – சிறுமைக்
கட்டுகள் அறுந்து விழவேண்டும்

(வேண்டும்….)

தலைவன் ஒருவன்
வரவேண்டும் – வெற்றித்
தகுதி கருணை
எனவேண்டும் – நின்று
தங்கும் நேர்மை பெறவேண்டும்

அழியும் அகிலம்
தொடவேண்டும் – எங்கும்
அன்புப் பயிர்கள்
நடவேண்டும் – வஞ்சம்
அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

(வேண்டும்….)

காலை எழுந்து
பறந்திடணும் – பத்துக்
கோள்கள் கண்டு
திரும்பிடணும் – அந்தி
கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத்
தழுவிடணும் – அன்புக்
கவியால் கைகள்
குலுக்கிடணும் – உள்ளக்
கனவைக் கேட்டு களித்திடணும்

(வேண்டும்….)

மதங்கள் யாவும்
இணைந்திடணும் – செல்லும்
மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும் – தெய்வம்
மனிதம் கண்டு தொழுதிடணும்

உதவும் உள்ளம்
எழவேண்டும் – இந்த
வரங்கள் அருளும்
வலுவேண்டும் – என்றன்
வார்த்தை விண்ணை உழவேண்டும்

அன்புடன் புகாரி

000

கவிதையும் கருத்தும்
கவிதை பாட வேண்டும் அதிலொரு
கருத்தைக் கூற வேண்டும்
தமிழைப் பாட வேண்டும் அதன்
தரத்தைக் காக்க வேண்டும்
வாழ்க்கை முறையைக் கூற வேண்டும்
வறுமை போக்கும் வழி காண வேண்டும்
உதவும் உள்ளம் வேண்டும் எப்போதும்
உயர்ந்த எண்ணம் வேண்டும்
சோம்பல் குணம் உதறும் உறுதி வேண்டும்
சொந்த உழைப்பில் வாழ வேண்டும்
விதியோடு தினம் போராடி சோறுண்ணும் தோழன்
வழி காண சந்தர்ப்பம் உருவாக்கும் ற்றல் வேண்டும்
நான்கு சுவர்களுக்குள் உலகைக்காணும் மனப்பான்மை
நயமாக களைந்தெறியும் உறுதி வேண்டும்
இனியேனும் உண்மை காணும் உள்ளம் கொண்டு
இனிமை வாழ்க்கை ஏழ்மையில் வாடும் தோழர்களிப்போம்.

சத்தி சக்திதாசன்

000

இப்பதிவு பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை “உங்கள் கருத்துக்கள்” பகுதியில் பதிவு செய்யுங்கள்!