திசை மாறும் பறவைகள்
காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன.
இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு.
வெளி நாடுகளில் குளிரிலே குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக நின்று போராடி எங்களைப் படுகொலையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல் களைத்துப் போன எம் உறவுகள் ஊரிலே எல்லாம் அழிந்தொழிந்த பின்பும் கூட எஞ்சியவர்களுக்கு பொருள் உதவி செய்து தொழிலும் படிப்பும் கொடுத்து அரவணைக்க நினைக்கும் போது எம்மை அழித்த கைகளுக்கு பப்பாப்பழம் கொடுப்பது இன்று குற்றமாகத்தான் தெரிந்தது நந்தாவுக்கு.
அடுப்பு எரிந்தாலாவது அந்த நெருப்பில் விளக்கேற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் கொடுப்பனவு இல்லாமல் போய்விட்டது. மத்தியான வேளை மட்டும் எரிந்து அணையும் அடுப்பில் எப்போதாவது தான் இரவு வரை சாம்பலுக்குள் தணல் ஒளிந்து கிடக்கும் மற்றப்படி அந்த அடுப்பு செந்தாமரை மலர் போலக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.
இந்தாங்கோ அம்மா. ஏதாவது வாங்கிச் சமைத்து தம்பி தங்கச்சிக்கு கொடுங்கோ என்று நந்தா காசு கொடுத்தாலும் அப்பாவுக்குப் பயந்து அம்மா வாங்க மாட்டாள். ஒருமுறை அம்மாவுக்கு காசு கொடுத்ததற்கே அப்பா சத்தம் போட்டவர்
ஊர் பேர் தெரியாத ஒரு புண்ணிய ஆத்மா நீ பல்கலைக்கழகம் போய் படித்து இந்த வன்னிச் சனங்களுக்கு மருத்துவ சேவை செய்வாய் என்று நம்பி வெளிநாட்டிலே இருந்து அனுப்புற காசை எடுத்து எங்களுக்குச் சாப்பாடு போட்டு நம்பிக்கைத் துரோகம் செய்து போடாதே அம்மா!
நீ படி! அந்தக் காசு உனது படிப்புக்கு மட்டும்தான் பயன்பட வேணும். நான் உழைச்சு அம்மா தங்கச்சி ஆட்களைப் பார்ப்பேன். என்று மனுவேதம் பேசும் அப்பா அகதி முகாமில் இருந்து சொந்த வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே பின் வளவு துப்பரவு செய்கிறேன் என்று வெளிக்கிட்டு மிதி வெடிக்கு வலக் காலைக் கொடுத்துவிட்டு ஆறு மாதங்களாக வீட்டில் தான் இருக்கிறார் எந்த வருமானமும் இல்லாமல்!
ஆண்டுக் கணக்கிலே பாவிக்காமல் பாசி படர்ந்து கங்குமட்டைகள் விழுந்து ஊறிக் கிடந்த கிணற்றிலே தாம்புக் கயிறு கட்டி அம்மா அள்ளிய முதல் வாளி தண்ணீருக்குள் பாசியோடு வந்தது காணாமல் போன அத்தானின் கை எலும்பு தான். சிதறிக் கிடந்த துப்பாக்கிச் சன்னங்களும் வேலி ஓரத்தில் நைந்து கிடந்த அவரின் கோட்டுச் சாரமும் அத்தான் இனி இல்லையென்று சொல்லிவிட்டன.
முகாமில் இருந்து காணி பார்க்கப் போனவர் திரும்ப வரவில்லை. எங்காவது தடுத்து வைத்திருப்பான்கள் தேடுறன் இன்னும் தேட வேணும் என்றுதான் இன்றைக்கும் அக்கா சொல்லும். ஆனால் எலும்பு விசயம் அதுக்குத் தெரியாது. அம்மா சொல்லாமலே விட்டிட்டா. அது கவலைப்படும் என்று.
போர் நடந்த போது அதன் தாக்கம் யாருக்கும் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட புரியவைக்கப்படவில்லை என்பதே சரியாக இருக்கும். வெற்றி பெற்றிருந்தால் கூட அதன் தாக்கம் தெரிந்திருக்காது. ஆனால் தோற்றுப் போய் சிந்திக்க எதுவும் இல்லை என்ற நிலையில் போரின் கொடிய முகம் அடிக்கடி எல்லோர் மனதிலும் தோன்றி மறைகிறது. மனம் பயப்படுகிறது.
அக்கா தன் சீவியத்துக்காக வவுனியாவில் நெசவு தறியில் தான் ஆடை நெய்வது போல நொந்து நூலாகக் கிடக்கும் தான் பிறந்த குடும்பத்தையும் நெய்து முழு ஆடை ஆக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியினால் தான் நந்தாவின் பெயரும் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு பத்திரிகை ஒன்றினால் உதவிக்கு சேர்க்கப்பட ்டு புலம்பெயர் சமூக உதவி என்ற நிலைக்கு அவள் படிப்பைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
நந்தா அப்பாக்கு கால் ஏலாது. அக்காவும் உதவியில்லாமல் வேலைக்கு போகுது அதுக்கு ஏன் பாரமாக இருக்க வேணும் என்று படிப்பைக் குழப்பிப் போடாதே. நீ படித்தால் தான் அக்காவையும் சேர்த்து வன்னி மக்களோடு காப்பாற்றலாம் என்ற தோழிகளின் வார்த்தையில் இருந்த நியாயத்தை உணர்ந்து தான் கைவிளக்கிலும் படிப்பது என்று முடிவெடுத்தாள் நந்தா.
சில நேரங்களில் அந்தப் படிப்பை விடப் பசி பெரிதாகப் போய்விடும் அவளுக்கு. ஏன் இந்தப் படிப்புக்கு தொடங்கினேன் என்று கூட அவள் நினைத்தது உண்டு. படிப்புக்கு என்று பணம் அனுப்புபவர்கள் பசிக்கும் சேர்த்து அனுப்பினால் கோடி புண்ணியமாகப் போகும். ஆனால் அவர்களின் கடிதங்களில் அது பற்றி ஒரு வார்த்தையும் இருப்பது இல்லையே என்ன செய்வது?
இங்கேயம்மா நந்தா! உனக்கு காசு அனுப்புற ஆட்களுக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் போடு மோனை. நீங்கள் எனக்கு செய்யுற இந்த உதவிக்கு நான் நீங்கள் சொன்னபடி படித்து போரினால் பாதிக்கப்பட்ட இந்த வன்னி மக்களுக்கு சேவை செய்வேன் என்று எழுதம்மா
அம்மா ஞாபகப்படுத்திய மக்களை நினைத்துப் பார்த்தாள் நந்தா. முழு நாட்டுக்குமாக தன்னை முழுமையாகச் சிதைத்துக்கொண்ட ஊர். இறுதி யுத்தத்தின் சுவடே அறியாத யாழ்ப்பாணத்து மக்கள். இயல்பு வாழ்வை இழந்து விடாத கொழும்புத் தமிழர்கள் இவர்களுககு நடுவே குலைந்து போய்க்கிடக்கும் சின்னத் தேசம். அதைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது.
அம்மா சொல்வது போல கடிதம் எழுத அவளுக்கும் விருப்பந்தான். எப்படி எழுதுவது? யார் அவர்கள்? அவர்கள் யாராக என்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். வெளி நாட்டிலே வசதியாக வாழ்ந்தாலும் போரினால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களை நினைக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற என் போன்றவர்களை விதைக்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள் மடடுமல்ல. எம்மவர்கள்.
மருத்துவப்படிப்பு முடிய பல வருடங்கள் எடுக்கும். அதற்கான செலவோ மிகவும் அதிகம். அதைப் பொறுப்பேற்று செய்ய ஒரு உள்ளம் முன்வருகிறது என்றால் அது தெய்வம் தானே! நந்தா எழுதினாள். எழுதித்தான் போட்டாள்!
காலமெல்லாம் எங்கள் மக்களுக்கு உங்களின் பெயராலே சேவை செய்யக் காத்திருக்கும் நந்தா என்று கையெழுத்தும் போட்டு அனுப்பினாள். பதில் இல்லை.
ஒருவேளை உதவி செய்யாமல் விட்டுப் போடுவினமோ? மனம் பதைத்தது. நெருக்கிக் கேட்க அண்ணனா தம்பியா? என்ன செய்வது?
அம்மா நாளைக்கு கடைசி நாள். பணம் கட்ட வேணும் அம்மா. வெளி நாட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லையே! ஒரே ஒரு முறை கொஞ்சப் பணத்தை அனுப்பிப் போட்டு பேசாமல் இருந்தால் நான் என்ன செய்யிறது? இவர்களை நம்பித்தானே நான் படிக்க வெளிக்கிட்டது. ஏன் இப்படிச் செய்யினம்? நான் முதலே நெசவுக்கு போயிருக்கலாம்.
இங்கே பிள்ளை நான் ஒருக்கால் அக்காவைக் கொண்டு டெலிபோன் பண்ணிப் பார்க்கிறன். அண்ணா உயிரோடு இருந்திருந்தால் ஏன் இந்தக் கஸ்டமெல்லாம்? உன்னை இப்படித் தவிக்க விட மாட்டான்.
இல்லை அம்மா எனக்கு தெரியும். வெளிநாட்டிலே இருக்கிற சில பேருக்கு ஊர் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்ல மட்டும் தான் விருப்பம். அதற்கு ஒரு ஆதாரம் ஊரிலிருந்து கிடைத்துவிட்டால் போதும். நான் நன்றி சொல்லிப் போட்ட ஒரு கடிதம் அவர்களுக்கு ஆயள் முழுவதும் காணும் தங்களை உயர்த்திக் கொள்ள. சிலருக்கு அது மட்டும்தான் தேவை. இனிக் காசு வராதம்மா. என்னுடைய படிப்பும் அவ்வளவு தான.; நந்தா அழுதாள்.
இல்லைப் பிள்ளை அதுகளுக்கும் என்ன பிரச்சனையோ.
அம்மா பிரச்சனை இருக்கலாம். என்னுடைய படிப்புக்கு ஆகும் செலவு அதற்கான காலம் எல்லாம் பத்திரிகைத் துறையினர் கொடுத்துத் தானே இருப்பார்கள். தங்களால் முடியாவிட்டால் அதை வேளைக்கே சொல்லியிருக்கலாம் தானே. சொல்லியிருந்தால் நான் கனவுகளை வளர்த்திருக்க மாட்டேன். இப்ப தன்னும் உதவி செய்வினமா இல்லையா என்பது கூட தெரியாமல் நான் தவிக்கிறன்.
இங்கேயம்மா நந்தா நீ படித்த பிள்ளை. உனக்கு தெரியாதது அல்ல. மனிதன் உணர்ச்சியின் விளிம்புக்குப் போய்விட்டால் அவன் பேசும் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊடகச் செய்திகளை மட்டும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு உதவி செய்யப் புறப்படுபவர்களின் நட்பு இப்படித்தான் இருக்கும். அது மனித இயல்பு. படித்தவனுக்குத் தான் தெரியும் படிப்பைப் பற்றி. வெளிநாட்டிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து நாங்கள் படிக்கத் தொடங்கினமே ஒழிய அதை அனுப்பிய ஆட்களின் தகுதி பற்றிச் சிந்திக்காமல் இருந்து விட்டோம். சரி போகட்டும். படித்தது காணும். நீ ஏதாவது வேலை தேடு.
பாதியில் நிக்கும் தன் வலக்காலைத் தடவியபடியே சொன்ன அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் நந்தா. பசியோடு உறங்கும் தம்பி தங்கைகளைப் பார்த்தாள். மாவிரனாகிவிட்ட அண்ணனை நினைத்துப் பார்த்தாள். இப்போது அவள் அழவில்லை. அம்மா விரித்துவிட்ட சாக்குப் பைக்கு மேலே மருத்துவப் புத்தகத்தை தலையணையாக வைத்துக்கொண்டு சரிந்து படுத்தாள் நந்தா.
அம்மா நித்திரையா?
இல்லை நந்தா என்ன?
அம்மா கிணத்தடி பப்பா மரத்திலே ஒரு பழம் பழுத்து இருக்குது கண்டீங்களா?
அதுக்கு இப்ப என்ன மோனை?
நாளைக்கு அதைப் பிடுங்கி ரணசிங்காவுக்கு கொடுப்பமே?
ஏன் மோனை நெருப்பட்டி ஏதாவது வேணுமே
இல்லை அம்மா இனி இந்த நாட்டிலே நாங்கள் வாழ வேண்டுமென்றால் வேறு ஒன்று தேவை.
தீர்க்கமாகச் சொல்லிவிட்டு மௌனமானாள் நந்தா.
இரா. சம்பந்தன்


