இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர். அதனையும் பல ஆண்டுகளாக மாற்றுவதும் இல்லை. இவை டாகுமெண்ட்கள் மற்றும் பைல்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் பரவாயில்லை. ஆனால், நிதி சார்ந்த டிஜிட்டல் பரிமாற்றங்களில், ஒரே பாஸ்வேர்டினைப் பயன்படுத்துவது, அதனைப் பயன்படுத்துவதன் நோக்கத்தினையே கேலிக் கூத்தாக்கிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள், மிக எளிதாக அந்தப் பாஸ்வேர்டினைப் புரிந்து கொண்டு, அதனைப் பயன்படுத்தி நம் பெர்சனல் தகவல்களையும், பணத்தையும் எடுக்க முயற்சிக்கலாம்.

அதனால் தான், வங்கிகள் குறிப்பிட்ட கால வரையறையில், பாஸ்வேர்ட்களை மாற்றுவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். மேலும், முன்பு பயன்படுத்திய பாஸ்வேர்ட்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றன. 
பாஸ்வேர்ட் அமைப்பதில் நாம் செய்திடும் தவறுகளை இங்கு காணலாம். அவற்றைத் தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் இங்கு பார்க்கலாம்.

எளிமையான பாஸ்வேர்ட் வேண்டாம்
எளிதில் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைவராலும் அறிந்து கொள்ளக் கூடிய பாஸ்வேர்ட்களை நாம் பயன்படுத்தக் கூடாது. இதுவரை திருடர்களால், கண்டறியப்பட்ட பாஸ்வேர்ட்களைக் காண்கையில், மிக எளிய பாஸ்வேர்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. 
பலர் “password”, “12345” “qwerty” என்றெல்லாம் மிக எளிமையான பாஸ்வேர்ட்களை அமைப்பது நினைவில் வைத்துக் கொள்ள எளிதாக இருக்கலாம். ஆனால், இவற்றை மற்றவர்களும் எளிதில் எண்ணி பயன்படுத்த முடியுமே! இவற்றைக் கண்டுபிடிக்க என எழுதப்பட்ட புரோகிராம் ஒன்று, இவற்றை முதல் முயற்சியிலேயே கண்டறிந்துவிடும். எனவே, உங்கள் பாஸ்வேர்டில் அமையும் எழுத்து கோர்வை ஒரு சொல்லாக இருக்கக் கூடாது. கேபிடல் எழுத்துகளையும் சிறிய எழுத்துகளையும் இணைத்து அமைக்கவும். அவற்றில் இலக்கங்களையும் இடையே சேர்க்கவும். ஆச்சரியக் குறி, டாலர் குறியீடு போன்ற குறியீடுகளையும் இணைக்கவும். இவற்றை எந்த ஒரு வரிசையிலும் இல்லாமல் இருக்கும்படி அமைக்கவும். பாஸ்வேர்டின் இறுதியாகவோ அல்லது தொடக்கத்திலோ இருக்கும்படி அமைக்க வேண்டாம்.

வாழ்க்கை சார்ந்த சொல் 
சிலர் தங்கள் வாழ்க்கையில் உள்ள முக்கிய நாட்களை நினைவு படுத்தும் வகையில் பாஸ்வேர்ட் அமைப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள், செல்லப் பிராணியின் பெயர், பள்ளியின் பெயர் என இவை இருக்கும். இவை நினைவில் கொள்ள எளிதாக இருக்கும். ஆனால், உங்கள் நண்பர்களுக்கும் இந்த பெயர்கள் தெரியும் என்பதால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தெரியக் கூடும் என்பதால், இத்தகைய பாஸ்வேர்ட்கள் பாதுகாப் பற்றவையாக உள்ளன. மேலும், இத்தகைய நிகழ்வுகளை நாம் சமூக வலைத் தளங்களில் அனைவரும் அறிய தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். பேஸ்புக் போன்ற தளங்களில், நம் வாழ்க்கை சார்ந்த தகவல்கள் பலவற்றை வெளியிடுகிறோம். எனவே, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய பாஸ்வேர்ட்களை, அனைவரும் அறியக் கூடிய தகவல்களின் அடிப்படையில் அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும். 

அனைத்திலும் ஒரே பாஸ்வேர்ட் 
ஒரே கம்ப்யூட்டர் வழியாக, நம் டிஜிட்டல் வாழ்க்கையினை நாம் மேற்கொண்டாலும், பல்வேறு வகையான தளங்களில் நாம் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரை இயக்க, வங்கிக் கணக்கினை இணையத்தில் பார்க்க, நிதிப் பரிமாற்றம் மேற்கொள்ள, நிறுவனங்களின் நெட்வொர்க் இணைப்பில் நுழைய, மின் அஞ்சல் கணக்குகளைக் கையாள எனப் பல்வேறு சமூக பிரிவுகளில் நாம் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை அனைத்திலும் பலர் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் முன் பகுதி ஒரே மாதிரியாகவும், அடுத்த பகுதி, பயன்படுத்தப்படும் தளத்திற்கேற்பவும் அமைக்கின்றனர். எடுத்துக் காட்டாக, mydadfacebook, mydadgmail, mydadyahoo என அமைக்கின்றனர். இது போன்று அமைப்பதும், ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்துவது, விபத்தை வழி காட்டி அழைப்பதற்கு ஒப்பாகும். ஏதேனும் ஒரு பயன்பாட்டில் இதனை அறியும் திருடர், உங்கள் அனைத்து பிரிவுகளிலும் எளிதாகத் தன் கை வண்ணத்தைக் காட்டி, தகவல்களையும் பணத்தையும் திருட இது சந்தர்ப்பம் அளிக்கிறது.

பாஸ்வேர்டை மாற்றாமல் இருப்பது
நம் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பாஸ்வேர்ட் ஒன்றை, அது எவ்வளவு சிக்கலானதாக, பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்தாலும், அடிக்கடி மாற்றப்பட வேண்டும். இல்லை எனில், இதனைத் திருட்டுத்தனமாகக் கைப்பற்றுபவர்களுக்கு நாமே அதிக காலம் கொடுத்தவர்களாக ஆகிவிடுவோம். இந்த தவறு என்றேனும் ஒரு நாளில் நமக்குப் பேரிழப்பைத் தரலாம். இதனால் தான், சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை, மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை தங்கள் பாஸ்வேர்ட்களை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். சில நிறுவனங்கள், அதன் ஊழியர்கள் நெட்வொர்க் இணைப்பில் நுழைகையில், ஒவ்வொரு முறையும் சிஸ்டம் தரும் பாஸ்வேர்டினைப் பயன்படுத்தும் வகையில் இரு வழி பாஸ்வேர்ட் தரும் முறையைப் பின்பற்றுகின்றன. பாஸ்வேர்டை குறிப்பிட்ட கால அளவில் மாற்றுவது என்பது சற்று சிரமம் தரும் செயல் தான். இருப்பினும் நம் பாதுகாப்பிற்காக, இதனை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும். மாதம் ஒரு முறையாவது பாஸ்வேர்ட்களை மாற்றுவது நல்லது. 

இருவழி பாஸ்வேர்டைத் தவிர்ப்பது
ஏறத்தாழ அனைத்து அமைப்புகளுமே, தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்க்கினைப் பயன்படுத்துகையில், இரு வழி பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர். இதில் பாஸ்வேர்ட் உடன் கூடுதலாக இன்னொரு பாதுகாப்பு வழியினையும் நாம் மேற்கொள்ள வேண்டும். பாஸ்வேர்டைப் பயன்படுத்தும் போதும், பாஸ்வேர்டை மாற்றும் போதும் இது தேவைப்படுகிறது. இது ஒரு கேள்வி பதிலாக இருக்கலாம். அல்லது நம் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண்ணாக இருக்கலாம். இந்த கூடுதல் இரண்டாம் நிலை பாதுகாப்பு, பாஸ்வேர்டைக் கண்டறிவதற்கென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களின் செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எனவே, இந்த இரு நிலை பாதுகாப்பு வழியினை மேற்கொள்ளாமல் இருப்பதுவும் தவறு. இதனைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
மேலே சுட்டிக் காட்டப்பட்டவை அனைத்தும், நம் பாஸ்வேர்ட் பயன்பாட்டில் நாம் மேற்கொள்ளும் தவறுகளே. இவற்றைத் திருத்திக் கொள்வது நமக்கு நல்லது. நிம்மதியாக நம் வாழ்க்கையைத் தொடரலாம். நமக்கு ஒன்றும் ஏற்படாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டால், அது மிகவும் மோசமான நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். மீண்டும் இழப்பைச் சரி செய்திட முடியாத நிலைக்குக் கூட இழுத்துச் செல்லும். எனவே, தவறுகளைத் தவிர்ப்போம். 

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்